வட்டக்கச்சி பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பெருமளவு படையினர்! தேடுதல் நடவடிக்கையில்....

Report Print Yathu in சமூகம்

வட்டக்கச்சியில் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக இரகசிய தகவல் கிடைத்தையடுத்துமேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜாவின் கட்டளைக்கு அமைவாக இன்று காலை அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நீதவான் நேரடியாகச் சென்று பார்வையிட்ட நிலையில் கிராம அலுவலர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும் போது குறித்த பிரதேசத்தில் அதிகளவான இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இதன்போது எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதி கிளிநொச்சி - வட்டக்கச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீட்டிற்கு அண்மித்த பகுதி என தெரியவந்துள்ளது.