நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

8 அம்சக் காரணிகளை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், தரமற்ற மருந்துகளை விநியோகித்தல், சுகாதாரத் துறையை அரசியல் மயமாக்குதல், உரிய வகையில் வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்காததால் சில பகுதிகளில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றமை ஆகிய பிரச்சினைகளுக்கு சுகாதாரத் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மருந்துகள் எடுக்க முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா

அரச வைத்திய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தரும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தூர இடத்திலிருந்து வருகை தரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதனை அவதானிக்க முடிகிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு பின்னரும் தகுந்த தீர்வு எட்டப்படவில்லை எனின் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - தீசன்

மன்னார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மன்னாரில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், வைத்தியசாலையின் வெளி நோயளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை.

அத்துடன், தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் பல்வேறுஅசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரியவருகின்றது.

செய்தி - ஆஷிக்

புதிய இணைப்பு

அம்பாறை

அம்பாறை மாவட்டத்திலும் அரச வைத்திய அதிகாரிகளினால் ஒரு நாள் பணி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிபகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருவதாகவும், சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருவோருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளில் எவ்வித பணிகளும் இடம்பெறவில்லை என்பதுடன் தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் திரும்பி செல்ல நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Latest Offers

loading...