அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகள் மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Kumar in சமூகம்

அம்கோர் நிறுவனத்தினால் அவுஸ்திரேலிய உயர்தானிகராலயத்தின் நிதி அனுசரனையில் கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் 2019 ஆண்டிற்கான புதிய திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் 2015 - 2018 காலப்பகுதியில் முறையற்ற விதமாக புலம் பெயர்பவர்களை கட்டுப்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளினூடாக பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் மனித சமூக பொருளாதார மூலதனங்களை அம்கோர் நிறுவனம் எவ்வாறு கட்டியெழுப்பியுள்ளது என்பன பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக 90 குழுக்களை சேர்ந்த 914 பெண்களும், 468 இளைஞர் யுவதிகளும் பயனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்துடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அவர்களுடைய பொருளாதார தேவைகளில் தன்னிறைவுடன் இருப்பதன் காரணத்தால் இவர்கள் தேவையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் ஈடுப்படுதல் மிகவும் குறைந்துள்ளது.

இது தற்போதைய கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டது.

இதன் போது அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகளும், எதிர்கால மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதுடன், இனிவரும் காலங்களில் முறையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அணுகுமுறை மூலம் செயற்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்களை பார்வையிடல், தொழில் பயிற்சி நிறுனங்களுடனான சந்திப்புகளும் இடம்பெற்றதுடன், முறையான நுண்கடன் செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகமும் பார்வையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உதவிப் பணிப்பாளர் வென் ரீவிஸ், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகரான கன் சோவைட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ச. புண்ணிமூர்த்தி மற்றும் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் . ப. முரளிதரன், நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன், வெளிக்கள அலுவலர் கி. உதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers

loading...