மட்டக்களப்பு மாவட்ட கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமுர்த்தி தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வினை அரசாங்க அதிபர் உதயகுமார் கலந்துகொண்டு சம்பிராய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் செய்து கொண்ட கொள்கை திட்டத்திற்கமைய அரசாங்கத்தின் பணிப்புரையில் மாவட்ட அராசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, குறித்த மீள்குடியேறவுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகள் அரச திணைக்களங்களின் அதிகாரிகளால் இலகுவாக வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் சகல திணைக்களங்களையும் பணித்துள்ளார்.
இதற்கமைய இத்திட்டத்தை சிறப்பாக அமுல்படுத்தும் பொருட்டே இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி, பிறப்பு, இறப்பு பதிவு, தேசிய அடையாள அட்டை மற்றும் அத்தியாவசிய ஆவண தேவைகளை இலகுவாக பெற்றுக்கொடுக்க தேவையான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் ஜெயா கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண பதிவாளர் நாயகம் க.திருவருள், மாவட்ட காணி உத்தியோகத்தர் குகதாஈஸ்பரன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் க.குகதாஸன் உட்பட பல அதிகாரிகளால் இது பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.