அடையாளந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலயம்

Report Print Navoj in சமூகம்
94Shares

மட்டக்களப்பு - கிரான், வாகனேரி ஸ்ரீ இத்தியடி விநாயகர் ஆலய சுற்றுமதில் தூண்கள் அடையாளந்தெரியாத நபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு சுற்று மதிலுக்கான அத்திவாரம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆலய காணி எல்லை பிரச்சினை தொடர்பாக தீர்வு பெற்றப்பட்டதன் பின்னர் கட்டட வேலைகளை ஆரம்பிக்குமாறும், குறித்த கட்டட வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரால் நேற்று மாலை உத்தரவு வழங்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், அங்கிருந்து அனைவரும் சென்றிருந்ததையடுத்து சுற்றுமதில் அமைப்பதற்காக அத்திவாரம் மற்றும் தூண்கள் சிலவற்றை அடையாளந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் தூண்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் கற்பூரம் எரிக்கும் சட்டியை உடைத்து ஆலய மூலஸ்தானத்தினுள் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளதாகவும், மூலஸ்தான நுழைவாயிலில் சீமெந்துக்களை கொட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.