வத்தளையில் நடந்த கொலைகள் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Report Print Steephen Steephen in சமூகம்
352Shares

வத்தளை ஸ்ரீ அய்யப்பன் ஆலயத்திற்கு எதிரில் கடந்த ஜனவரி 13ம் திகதி இரண்டு பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய திட்டமிட்டு செயற்படும் குழுவின் இரண்டு உறுப்பினர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இலக்கம் 128-8 ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13 என்ற முகவரியை சேர்ந்த புக்குடி கண்ணா என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜா, 131-52 ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13 மற்றும் அம்மன் கோயிலடி, அம்மான் நகர், பூந்தோட்டம் வவுனியா என்ற முகவரிகளை சேர்ந்த பும்பா என்ற என்ற ஸ்டன்லி கெனட் பெர்னாண்டோ ஆகிய சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொலை சம்பவம் இந்த சந்தேக நபர்களின் திட்டத்தின்படி நடந்துள்ளதாக பேலியகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள், கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசங்களில் நடமாடுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் இதனால், இவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை அறிந்தவர்கள், களனி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் - 0718591589 அல்லது பேலியகொடை குற்ற விசாரணை விசாரணைப் பிரிவின் - 0777594258 ஆகிய இலக்கத்துடன் தொடர்புக்கொண்ட அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.