இதுவொரு அப்பட்டமான ஒரு நாடகம்! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Navoj in சமூகம்
224Shares

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழ்.மாவட்டத்தில் திறக்கக்கூடாது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை நியாயமானது.

ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகமாகும் என வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த விதம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான பயனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

மாறாக, ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலான ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக பல தடவைகள் எமது மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த ஏராளமானவர்கள் காணாமல் போன சம்பவத்துடன் நேரடி தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இலங்கை இராணுவ தளபதி பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்க எடுக்கும் முயற்சி அப்பட்டமான ஒரு நாடகமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது தெளிவான எந்த இலக்குகளோ, கால அட்டவணையோ அல்லது காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்களின் துயரங்களைப் போக்கும் எந்தப் பொறிமுறைகளுமோ இன்றியே அது செயற்பட்டு வருவதைக் காண முடிகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் அளவில் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை அதன் இரகசிய நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றது.

அந்த அறிக்கையில், இந்த அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.

இந்த அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்படாத ஏராளமான காணாமல் போன சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால், அவை தொடர்பில் இந்த அலுவலகம் கரிசனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. உதாரணமாக, மன்னார் மாவட்டத்தின் முன்னாள் பேராயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் அரசாங்க ஆவணங்களின் தரவுகளை ஆராய்ந்து 146,679 பேர் இறுதி யுத்தத்தின் போது காணாமல்போனதாக கூறி இருந்தார்.

ஆனால், இது தொடர்பில் இந்த அலுவலகம் கவனஞ் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

வெறுமனே கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மையிலேயே எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை அறிவதற்காக ஆவணங்கள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள், ஊடக அறிக்கைகள் மேலும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய தரவுகள் போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் பொருத்தமான ஒரு முறைமையை இந்த அலுவலகம் மேற்கொள்ளவில்லை.

காணாமல் போன சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு எவருமே மிஞ்சாமல் ஏராளமான குடும்பங்கள் முழுமையாகவே அழிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடு செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நிவாரணத்தை வழங்குவதற்கு அதிகாரம் இல்லாத ஒன்றாகவே இந்த அலுவலகம் இன்று வரை செயற்பட்டு வருகின்றது.

ஆகவே தான், வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகத்தை திறப்பதை எதிர்க்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கையை நான் ஆதரிக்கின்றேன்.

அரசாங்கம் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.