திருகோணமலையில் வீடுகளை உடைத்து திருடியவர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
89Shares

திருகோணமலை மாவட்டத்தில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் இன்று சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, உப்புவெளி, நிலாவெளி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சந்தேகநபர்கள் சென்று திருடிவிட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் செல்வதாக இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்ததுடன், அவர்கள் திருடிய உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புடைய திருட்டுச் சம்பவங்கள் குறித்து திருகோணமலையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மொத்தமாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், இத்திருட்டு சம்பவத்துடன் இவர்கள் தொடர்பு உடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நீதவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.