இலங்கைக்கு வரும் சுற்றுலா வருமானங்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு!

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்
314Shares

இலங்கைக்கு வரும் சுற்றுலா வருமானங்களை மீண்டும் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுற்றுலாத்துறையே இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருவாய் நான்காயிரம் மில்லியன் ரூபாவை தாண்டினாலும், அந்த நிதி மீண்டும் பல வடிவங்களில் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் 4,300 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அதில் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையர்கள் மீள வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

வோட்டர்ஸ் எட்ஜ் உள்ளிட்டங்கிய தியாவண்ணா ஓயா ஆற்றின் தென் கரையில் ஒரு பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்க நாம் நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளோம்.

அதற்கமைய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எதிர்கால நிர்வாக நகரத்தை இந்த இடத்தில் அமைக்கின்றது.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, கொழும்பில் ஏராளமான பெரிய அரசு நிறுவனங்கள் அதற்குள் கொண்டுவரப்படும்.

அதேபோல் எதிர்வரும் காலங்களில் கொழும்பு நகரம் நீர்வழிகளில் இணைந்தாக காணப்படும்.

துறைமுக நகரம் நகர்ப்புற மேம்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலத்தை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் ஜனாதிபதி ஒப்படைக்க உள்ளார். அதன் பின்னர் அதன் வளர்ச்சி நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக்கவுள்ளோம்.

தனியார் துறையை விட சிறப்பாகச் செய்ய முடியும் என்பதை நாம் காட்டியுள்ளோம். எனவே, அரச நிதி எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றது என்பதை எனது அமைச்சை பார்த்து தெரிந்துக்கொள்ள முடியும் என்றார்.