மட்டக்களப்பில் பெரும் அசம்பாவிதத்தை தடுத்த மிகப் பெரும் முக்கிய மனிதர்

Report Print Sujitha Sri in சமூகம்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்து சிதறிய காத்தான்குடி தற்கொலை குண்டுதாரியின் உடற் பாகங்கள் கடந்த 26ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்தில் ரகசியமாக புதைக்கப்பட்டது.

இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் கடந்த 27ஆம் திகதி மாலை இந்த விடயம் தொடர்பில் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டதால் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அரசியல்வாதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களுக்கு பலத்த அசௌகரியம் ஏற்பட்டிருந்தது.

இந்த விவகாரங்களையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் அவசர மனுவாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் முன்னறிவித்தல் மனுவை தாக்கல் செய்தார்.

புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை உடன் தோண்டி எடுக்க வேண்டும் என முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்து உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக அமைதியின்மையை தடுக்கவும், இந்த சம்பவத்தை வைத்து மேற்கொள்ளப்படும் சமூக சீர்குழைவை தடுப்பதற்கும் உடன் உடற் பாகங்களை தோண்டி எடுத்து பொறுத்தமான இடத்தில் புதைப்பதற்கு அவசர கட்டளை பிறப்பிக்குமாறு அரச சட்டவாதி சக்கரவர்த்தி யாதவன் முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்தே குறித்த உடற்பாகங்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க அரச அதிபருக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஒட்டு மொத்தத்தில் சமூக நலன் கருதி அரச சட்டவாதி மிக புத்திசாதுர்யமாக செயற்பட்டதால் மட்டக்களப்பில் சிலர் ஏற்படுத்த தயாராக இருந்த சமூக அமைதியின்னை தடுக்கப்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில், எவ்வளவு பெரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்த தரப்பினர் நீதிமன்றத்தை நாடி மேற்படி விடயம் தொடர்பான ஒரு அவசர மனுவை தாக்கல் செய்யாதமை வேதனையளிக்கிறது.

அத்துடன், சட்டத்தரணிகள் இந்த விடயத்தில் சட்ட நுணுக்கங்களை மிகவும் ஆழமாக பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர்கள் மௌனம் காத்தமை வேதனையை தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers