நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பேஸ்புக் நண்பர்களின் விருந்து! இலங்கையில் பெற்றோருக்கு எச்சரிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

ஹட்டன் நகரில் உள்ள பிரதான மண்டபம் ஒன்றில் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்ட விருந்தொன்றில் கேரளா கஞ்சா, போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹட்டன் மதுவரி திணைக்கள அலுவலக அதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து நடத்திய இந்த விருந்து நேற்று மதியம் 12 முதல் நள்ளிரவு வரை நடந்துள்ளதுடன், இதனை ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்த இடத்திற்கு சென்ற ஹட்டன் மற்றும் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகள், கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மண்டபத்தில் வீசப்பட்டு கிடத்த மேலும் 5,900 மில்லி கிராம் கஞ்சா, கொக்கேய்ன், போதை மாத்திரை, அடையாளம் காணப்படாத மற்றுமொரு போதைப்பொருள் என்பவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களை சேர்ந்த 16 முதல் 30 வயதான சுமார் 400 இளைஞர், யுவதிகள் விருந்தில் கலந்து கொண்டதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், ஹட்டன் ராவணாகொட, பிலியந்தலை, கண்டி மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தில் கலந்து கொண்ட சில இளைஞர், யுவதிகள் தமது பெற்றோரையும் விருந்துக்கு அழைத்து சென்றிருந்தாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இப்படியான விருந்துகள் நடத்தப்படுவதன் மூலம் சில இளைஞர், யுவதிகள் போதைக்கு அடிமையாவதாகவும் இது குறித்து பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், இவற்றில் இளம் சமுதாயத்தினர் கலந்து கொள்வது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் எனவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.