ஈழத்தமிழர்களுக்காக விண்ணதிர முழங்கிய உரிமைக்குரல் ஓய்ந்தது

Report Print Sujitha Sri in சமூகம்

ஈழத்தமிழர்களுக்காக அனைத்தையும் செய்வேன் என்று விண்ணதிர முழங்கிய சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானி காலமாகியுள்ளார்.

ராம் ஜெத்மலானி கடந்த ஓராண்டு காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 95ஆவது வயதில் இன்று அவர் இயற்கையெய்தியுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்குகள் இன்றைய தினம் மாலை லோதி மயானத்தில் இடம்பெறவுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில் ராம் ஜெத்மலானி பிறந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் மும்பைக்கு குடிபெயர்ந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் மிக இளம் வயதிலேயே (18 வயது) ராம் ஜெத்மலானி சட்டத்தரணியாக செயற்பட ஆரம்பித்தார்.

உலகளவில் அனைத்து தமிழர்களும் உற்று நோக்கிய ராஜீவ் கொலை வழக்கில் ஆஜராகி அவர் ஆஜராகியிருந்தார்.

அவரின் வாதத்திறமையால் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அத்துடன், வாஜ்பாய் அமைச்சரவையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் சட்டத்தரணி ராம் ஜெத்மலானி இருந்துள்ளார்.

புதுடெல்லியில் நிகழ்வொன்றில் அவர் உரையாற்றிய போது, ஈழத்தமிழர்களுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும், தேவையேற்படின் உச்ச நீதிமன்றம் சென்று வாதாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை ஞாபகமூட்டத்தக்கது.

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பல விடயங்களில் தனது முழு ஆதரவினை வழங்கி அவர்கள் தரப்பிற்கு எப்பொழுதும் பக்க பலமாக இருந்துள்ளார்.

வயது முதிர்ச்சியினால் மண்ணுலகம் விட்டு அவர் விண்ணுலகம் அடைந்த போதும் கூட ஈழத் தமிழர்களுக்காக அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருந்து நீங்காது.

அத்துடன் இவரது மறைவானது ஈழத்தமிழர்கள் மனதில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மறைந்த ராம் ஜெத்மலானிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.