2019 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழாவில் நுவரெலியா மாவட்டம் புறக்கணிப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

2019 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் நிகழ்வில் மலையகத்தினை சேர்ந்த நுவரெலியா மாவட்ட கலைஞர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்களின் அபிவிருத்தி ஒன்றியமும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் இரண்டாம் திகதி கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய 5,000 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்ததாக அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு மற்றும் அதன் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விண்ணப்பங்களில் இருந்து 224 பேரை தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவம் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் விழாவில் நுவரெலியா மாவட்ட கலைஞர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்பதை அண்மைக்காலமாக ஊடகங்களில் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றினை இன்று ஹட்டன் நகரில் உள்ள விருந்தகம் ஒன்றில் நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்களின் அபிவிருத்தி ஒன்றியமும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது குறித்த அமைப்புகளின் நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளதுடன்,ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையிலான மகஜர் ஒன்றினையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு நகரிலும், வடகிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் மக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு குறித்த நிகழ்வு நடைபெற்றதாகவும், மலையகத்தில் உள்ள கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக இதிலிருந்து புறக்கணிக்கபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் தகவல் அறியும் சட்ட மூலத்தின் ஊடாக தகவல்களை திரட்டி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்புக்களில் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.