வவுணதீவு பிரதேச பெரும்போகச் செய்கை தொடர்பில் தீர்மானம்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் இவ்வருட பெரும்போகச் செய்கைக்கு 31,438 ஏக்கர் பொருத்தமானது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத் திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைகளை வெளியேற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,179 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,051ஏக்கரும் மொத்தம் 31,438 ஏக்கர் இவ்வருட பெரும்போகச் செய்கைக்கு பொருத்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வருட பெரும்போக விவசாய வேலைகள் 2019 செப்டெம்பர் 10ஆம் திகதி தொடக்கம் இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், 2019 நவம்பர் 10அன்று காப்புறுதி இறுதித் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers