சுயாதீன தொலைக்காட்சியையும் ஜனாதிபதி, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வாய்ப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்த ஜனாதிபதி, ஊடகத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் பொறுப்பின் கீழ் வரும் சுயாதீன தொலைக்காட்சியையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வாய்ப்புள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கான காரணத்தை அறிவிக்கும் ஊடக அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதுவரை வெளியிடவில்லை.

எனினும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி சம்பந்தமாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக நிறுவனத்தில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என கருதி ஜனாதிபதி, நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து பக்கசார்பாக இயங்கி வரும் சுயாதீன தொலைக்காட்சி சம்பந்தமாக உடனடியாக தலையிடுமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தொடர்பாக அப்படியான அறிவிப்பு எதுவும் நேற்றைய தினம் வரை விடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அராஜக நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் நடவடிக்கையாகவே அதனை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு ஆதரவான சமூக வலைத்தங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.