கந்தளாய் தள வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் தள வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்துமாறு கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் தள வைத்தியசாலையின் முன்றலில் பிரதேச சபையின் பொது ஜன பெரமுன உறுப்பினர் விஜேவிக்கிரம லமா ஹேவாகே இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

கந்தளாய் வைத்தியசாலைக்கு 70 வைத்தியர்கள் தேவையாக உள்ளநிலையில் தற்போது 31 வைத்தியர்களே கடமையாற்றி வருகின்றார்கள், இவ்வாறு பல வளப் பற்றாக்குறைகளுடன் கந்தளாய் தள வைத்தியசாலை இயங்கி வருகின்றது. இவ்வாறான பின்னடைவுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கந்தளாய் தள வைத்தியசாலையின் வளங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு செல்வதோடு, கந்தளாய் தள வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் பெயரளவில் மாத்திரமே உள்ளதாகவும், வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்பட்டு வருவதாகவும் இது விரைவில் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.