மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்துள்ள பிரதேச செயலகம்

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர் புறக்கணிப்பிற்கும், உதாசீனத்திற்கும் உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது,

முல்லைத்தீவு, கள்ளப்பாடு தெற்கினை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் வீட்டுத்திட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர்களுக்கு காணி இல்லாததனால் அரச காணி ஒன்றினையும் பிரதேச செயலகம் வழங்கி உள்ளது. குறித்த காணியினை பயனாளி பெற்று பெருமளவு பணத்தினை செலவு செய்து வீடு நிர்மாணிப்பிற்குரிய மூலப் பொருட்களை பெற்றுக்கொண்டதுடன் குழாய்க் கிணறு ஒன்றினையும் நிர்மாணித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காணியினை முன்பு பராமரித்தவர்கள் குறித்த காணி தம்முடையது எனக் கூறி பிணக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பயனாளி உடனடியாக கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும் அதனைக்கேட்ட அதிகாரிகள் அப்படியாயின் எதிர்வரும் வீட்டுத்திட்டத்திலேயே பயனாளியை உள்வாங்க முடியும் எனக்கூறியுள்ளனர்.

இதனால் வீட்டுத்திட்டம் பறிபோய் விடும் எனக்கருதிய பயனாளி உடனடியாக கிராமத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு வாய்மூலமாக அறிவித்துவிட்டு வட்டுவாகல் பகுதியில் தனது மருமகளின் பெயரில் இருந்த காணியினை தனது பெயருக்கு சட்ட பூர்வமாக மாற்றி அதில் அமைந்திருந்த யுத்தத்தால் சேதமடைந்திருந்த சுனாமி வீட்டுடன் சேர்த்து புதிய வீட்டுத்தினை செயற்படுத்திய போது அதனை பிரதேச செயலாளர் அனுமதி பெறாது அமுல்படுத்துவதாக தெரிவித்து உடன் எவ்வித விசாரணைகளுமின்றி வீட்டுத்திட்ட பயனாளிப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதுடன் அவர்களால் வழங்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்தினையும் மீள செலுத்துமாறு பணித்துள்ளார்.

பாதிப்பினை உணர்ந்த பயனாளி உடனடியாக சென்று பிரதேச செயலாளரை சந்தித்த போதும் அவர் அவர்களுக்கு உரிய பதிலை வழங்கவில்லை.

இதனால் விரக்தியடைந்த பயனாளி இவ்விடயத்தை மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். இருந்தும் பயன் கிட்டாததால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு புகார் வழங்கியுள்ளார்.

இரு கட்டமாக விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த நபர் பயனாளியாக தெரிவு செய்யப்பட்டு அவா் பெருமளவு பணத்தை செலவு செய்துள்ளதாகவும் அதனால் அவர் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர் கொண்டிருப்பதாகவும், அனுமதி பெறப்படாது அதே பிரதேச செயலாளர் பிரிவில் வேறொரு பகுதியில் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதை சீர் செய்யக்கூடிய விடயம் எனத்தெரிவித்துள்ளதுடன்,பயனாளிக்கு வழங்கப்பட்ட காணியில் பிணக்கு இருந்ததனையும் உறுதிப்படுத்தியது.

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது வீட்டுத்திட்டம் ஒன்று விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்படின் அதனை நிறுத்தி விசாரணைகளை மேற்கொள்வதும் சரியான வழிகாட்டல்களை வழங்கி அதனை சீர் செய்வதே பிரதேச செயலகத்தின் கடமையாக இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன் மாறாக எவ்வித விசாரணைகளும் இன்றி பொதுமகன் ஒருவரின் வீட்டுத்திட்டத்தை நிறுத்துவது எதேச்சகரமானது என அறிவித்தது.

குறித்த பயனாளிக்கு வீட்டுத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவுரை விடுத்துள்ளது.

எனினும் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்தாது மேற்படி அதிகாரிகள் இவ்விடயத்தினை கிடப்பில் விட்டுள்ளனர். பெருமளவு செலவுகளால் உரிய வீட்டுத்திட்ட பயனாளி திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் பொதுமகனிற்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என விமர்சிக்கப்படுகின்றது.