சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Report Print Gokulan Gokulan in சமூகம்

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு பாண்டிருப்பு கடற்கறையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்திருந்தனர்.

இவ்வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் போது, பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் பொலிஸார் மேலும் ஒருவாரம் சந்தேகநபரை மேலதிக விளக்கமறியலை வைக்க கோரியிருந்ததையடுத்து நீதிவானால் அனுமதி வழங்கப்பட்டது.

சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பினரின் வழக்கினை பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுத்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபதுடன் இரு பெண் பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.