கூட்டமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை தமிழர்களுக்கு உண்டு!

Report Print Kumar in சமூகம்

எந்தவொரு சிங்கள தலைவரையும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராகயில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கற்றல் வள நிலைய கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியாக இருந்து தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிவரும் ஒரு கட்சி இன்று பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிலைக்கு வந்துள்ளது என்றால் சிலருக்கு அது கேள்வியாகவும் சிலருக்கு நல்ல விடயமாகவும் இருக்கின்றது. இரண்டுக்கும் பதிலளிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

2015ஆம் ஆண்டு புதிய ஜனாதிபதி ஒருவரை கொண்டுவருவதில் தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உறுதியாக இருந்தார்கள்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உறுதியான தீர்வினை வழங்காது தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தினை மௌனிக்க செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினை வீட்டுக்கு அனுப்புவதில் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தோம்.

தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த நாட்டில் அட்டூழியங்களை செய்த ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினோம். புதிய ஜனாதிபதியை கொண்டுவந்தோம். அதன் பின்னர் புதிய அரசாங்கம் கொண்டுவரப்பட்டது.

நாங்கள் அபிவிருத்தியை மட்டும் மையமாக கொண்டுசெயற்படவில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத் தான் அகிம்சை ரீதியாக போராடியபோது அதற்கு சிறுபான்மை சமூகம் சரியான தீர்வினை வழங்காத காரணத்தினால் ஆயுதம் தூக்கி எமது இளைஞர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக பல பேச்சுவார்த்தைகளை ராஜபக்ச அரசாங்கத்துடன் மேற்கொண்டது. எல்லாம் ஏமாற்று வித்தையாகவே இருந்தது. அதனைத்தொடர்ந்து அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் திட்டங்கள் ஊடாக நிதிகளை வழங்கினாலும் எங்களது அபிலாசைகளை தீர்ப்பதில் முன்பு இருந்த அரசாங்கம்போல்தான் செயற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் எங்களுக்கு தீர்வினை விரைவாக தருவதாக கூறினார்கள். அதற்கு முன்னோடியாக புதிய அரசியலமைப்பினை கொண்டு வந்தார்கள். ஆனால் தமிழர்களை ஏமாற்றுவதில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான் என்பதை ரணில் விக்ரமசிங்க அரசாங்கமும் நிரூபித்துள்ளது.

மகிந்தவாக இருக்கலாம், மைத்திரியாக இருக்கலாம், ரணிலாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் இருட்டடிப்பு செய்கின்றார்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்றது,வேட்பாளர் பிரச்சினை ஐக்கிய தேசியக் கட்சியில் உருவாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, மறுபக்கம் கருஜயசூரியவை நியமிக்குமாறு கோரப்படுகின்றது, இன்னுமொரு பக்கம் ரணிலே வேட்பாளராக வரவேண்டும் என்ற கோரிக்கையிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேட்பாளர் நியமனம் தொடர்பில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என மக்கள் எங்களிடம் கேட்கின்றனர். நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எங்களை ஏமாற்றியவர் தான்,மகிந்த ராஜபக்சவும் எங்களை ஏமாற்றியவர் தான்,மைத்திரிபால சிறிசேனவும் எங்களை ஏமாற்றியவர்தான்.

சஜித் பிரேமதாச எங்களுக்கு உத்தரவாதங்களை வழங்கினாலும் அதனை எவ்வாறு கையாள்வார் என்பதை நாங்கள் சிந்தித்தே முடிவுகளை எடுக்க வேண்டும். அவரும் எங்களை ஏமாற்றமாட்டார் என்று எங்களால் கூறமுடியாது. நாங்கள் ஏமாந்த சமூகமாக இருக்கின்றோம்.

அதற்காக நாங்கள் ஓடி ஒழியமாட்டோம். நாங்கள் எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம்.

எங்களது மக்களின் அபிலாஷைகளை தீர்த்துவிட்டு அபிவிருத்திகளை தாருங்கள் என்றே நாங்கள் கோருகின்றோம். ஆனாலும் எங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை எங்கள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.

இப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைப்பாளர்கள் கட்டிடங்களை திறக்கின்றனர். ஒக்டோபர் 26ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அணிந்திருந்த பச்சை சேட்டை கழட்டிவிட்டு நீல சேட் போடலாமா என சிந்தித்தவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்டிடங்களை திறக்கின்றனர்.

நாங்கள் கொள்கையிலும் ஒன்றாகத்தான் இருப்போம். நாங்கள் உலகை கவர்ந்தவர்கள் அல்ல, உரிமைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக வந்தவர்கள்.

நாங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேவையாற்றியவர்கள். மிகவும் கடுமையான நேரத்தில் நாங்கள் எங்கள் சேவையினை செய்துள்ளோம். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்தோம். கட்சியை வளர்ப்பதிலும் நாங்கள் கூடிய அக்கறையுடன் செயற்பட்டோம். அப்போது பலர் எங்களுக்கு கைக்கொடுக்கவில்லை.

தற்போது பலர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார்கள். அவர்களின் சிலர் எங்களது கட்சிக்கு எந்தவகையிலும் ஆதரவு வழங்கவில்லை. பல துன்பங்களுக்கு மத்தியில் கட்சியை வளர்த்தோம்.

மட்டக்களப்பு மேற்கு வலயம் வந்தது என்றால் அது யாரால் வந்தது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த கல்வி வலயம் உருவாவதற்கு மூல காரண கர்த்தாவாக இருந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் தான் இதில் கூடிய அக்கறை காட்டினார்கள்.

அதற்கு சாதகமாக அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரனையும்,செல்வி தங்கேஸ்வரியையும் பயன்படுத்தினார்கள். இவர்கள் தான் இந்த வலயம் உருவாகுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாகாணத்திற்கு வந்த போது மாகாணத்தில் உள்ளவர்கள் அதனை செயற்படுத்த வேண்டும்.

அதுதான் நடைபெற்றது. ஆனால் எங்களுடன் இருக்கின்ற சிலரே எங்களுடன் இருந்துகொண்டு எங்களது கையை பிடித்து எங்களது கண்ணில் குத்துவது போன்று இந்த வலயத்தினை கொண்டுவந்தவர் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்தான் என்று பிரசாரம் செய்கின்றார்கள். வெட்கப்படவேண்டிய விடயம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இந்த வலயத்தினை கொண்டு வந்தவர்கள. அவர்கள் தொடர்பில் இவர்கள் பேசமாட்டார்கள். ஏன் என்றால் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் அவர்கள்.

இன்று ரணில்விக்ரமசிங்க அரசாங்கம் இந்த ஆட்சியில் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஆதரவே காரணமாகும்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச பேசியிருக்கின்றார்.

ஆறு மாதங்களுக்குள் தமிழர்களுக்கான தீர்விற்கு வழியேற்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளதாக அறிகின்றோம். ஆனால் அது தமிழ் மக்களின் நீண்டகால புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையுமாக இருந்தால் மட்டுமே அவரது கருத்து கருத்தில் கொள்ளப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாக இருக்கலாம்,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், மொட்டாக இருக்கலாம் தமிழ் மக்களின் விடயத்திலேயே நாங்கள் கரிசனையாக இருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாரும் பேசலாம். ஆனால் நாங்கள் சிங்கள தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்திருக்கின்றோம். அதனால் மூன்றாவது நாட்டின் அனுசரணையுடன் சரியான முறையிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டால் மாத்திரமே ஒப்பந்தம் செய்யும் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம். இன்னும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராகயில்லை.

யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தினை எங்கள் கட்சி தலைவர் வழங்குவார். அதற்கு அமைவாக எங்களது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.நாங்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் தமிழ் மக்களை பாதிக்காத வகையிலேயே முன்னெடுக்கப்படும்.

தமிழ் மக்களின் எதிர்காலத்தினை பெற்றெடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதனால் தான் இந்த அரசாங்கம் எங்களுக்கு அமைச்சு பதவி ஆசைகளை காட்டியபோதிலும், இடைக்கால ஆட்சியில் சிலர் பணங்களை வழங்க தீர்மானித்தபோதிலும் அனைத்தையும் தூக்கியெறிந்தோம். எங்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளே முக்கியமாகும்.

அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்கவில்லை. காப்பட் வீதிக்காகவும் மாடி கட்டிடங்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மண்ணில் உயிர்களை தியாகம் செய்யவில்லை.

இன்று ஒரு குடும்பத்தினை பார்த்தால் அமைச்சர் ரிசாட், அமீர்அலியின் அமைப்பாளராக தந்தையிருக்கின்றார், மகன் அமைச்சர் மனோகணேசனின் அமைப்பாளர். கணவன் முஸ்லிம்களின் அமைப்பாளர்,மகன் ஒரு தமிழனின் அமைப்பாளர் என்றால் மனைவி ஒரு சிங்களவரின் அமைப்பாளராகவே இருக்க வேண்டும். இவர்கள் தேர்தல் காலங்களில் பல வடிவங்களில் வருவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிழைவிட்டால் அதனை தட்டிக்கேட்கவேண்டிய உரிமை மக்களுக்கு உள்ளது .ஆனால் முகம்தெரியாத இணையத்தளங்களில் வந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.