ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இனங்களுக்கிடையே ஒற்றுமை அதிகரித்துள்ளன!

Report Print Kumar in சமூகம்
49Shares

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் உருவான நிலைமைகள் மாற்றமடைந்து இனங்களுக்கிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அதிகரித்துவருவதாக மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட சர்வமத குழுவினருக்கும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

கரித்தாஸ் எகட் அமைப்பின் வன்னி பிராந்திய சர்வமத குழுவினர் சர்வ மதங்களின் ஊடாக சமாதான முன்னெடுப்பு என்னும் தலைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

இந்த குழுவினர் ஆயர் இல்லத்தில் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப்பொன்னையா ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வன்னி பிராந்திய சர்வமத குழுவின் தலைவர் அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் இந்த விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், மத மற்றும் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு ஆயர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்திற்கும், வன்னி மாவட்ட சர்வமத குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது இன நல்லிணக்கத்தினையும் இனங்களிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக இனங்களிடையே ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் மதத்தலைவர்களின் பங்களிப்புகள் குறித்து விசேட கவனம் இங்கு செலுத்தப்பட்டுள்ளது.

இன நல்லிணக்கத்தினையும், மதங்களிடையேயான ஒற்றுமையினையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான கலந்துரையாடல்களை கரித்தாஸ் எகட் அமைப்பு மதத்தலைவர்களை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.