மீனவர்களை தாக்கிய கடற்படை வீரர்களுக்கு பிணை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை கடற்பரப்பில் நான்கு மீனவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கடற்படை வீரர்களுக்கும் பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா முன்னிலையில் இன்று நகர்த்தல் விண்ணப்பம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் கடற்படை வீரர்களை துறைமுகப் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதனையடுத்து இவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று கடற்படை வீரர்கள் சார்பில் சட்டத்தரணி பஸ்நாயக்க நகர்த்தல் விண்ணப்பம் ஒன்றினண தாக்கல் செய்தார்.

இதன்போது திருகோணமலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திருகோணமலை நீதிமன்றிற்கு சமூகமளித்து புல்மோட்டை பொலிஸார் சாட்சியாளர்களை இன்றையதினம் அழைத்து வருவதாகவும் விசேட காரணமாக கருதி அணிவகுப்பினை நடத்துமாறும் நீதிமன்றில் கோரினார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட 4 பேரையும் அழைத்து வந்தபோது அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன் 12 கடற்படையினரில் 08 கடற்படையினரை பாதிக்கப்பட்டவர்கள் இணங்காட்டினர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிப்ராஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களை கடற்படையினர் படம் எடுத்ததாகவும், இதனால் 12 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கக் கூடாது என நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேவேளை கடற்படையினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாது எனவும் நீதவானிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 16ஆம் திகதி வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.