நாட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி! தம்பர அமில தேரர் குற்றச்சாட்டு

Report Print Steephen Steephen in சமூகம்

தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர எடுத்த தீர்மானம், ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த தவறை திருத்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன ராஜகிரியவில் உள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தம்பர அமில தேரர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளை ஆடையை அணிந்துக்கொண்டு தேசப்பற்றாளராக காட்டி வருகிறார். அவர் எடுக்கும் தீர்மானங்களை பார்க்கும் போது, அப்படியான தேசப்பற்று இருப்பதை காண முடியவில்லை.

52 நாட்கள் அரசியல் சூழ்ச்சி மூலம் அவர் நாட்டுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தினார். அதன் மூலம் எமது அரசியல் மற்றும் ஜனநாயகத்திற்கு பெரிய கரும்புள்ளி ஏற்பட்டது.

தற்போது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தொலைக்காட்சி அரசுக்கு உள்ள மிகப் பெரிய தொலைக்காட்சி.

இப்படியான ஊடக நிறுவனம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது என்பது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் செயல். 52 நாட்களில் போன்று இந்த விடயத்திலும் ஜனாதிபதி எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியாக அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார்.

சுற்றாடல், சமூக நலன்புரி அமைச்சுக்களின் கீழ் தேசிய ரூபவாஹினியை கொண்டு வந்திருந்தால், எமக்கு பெரிய பிரச்சினையில்லை.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் அதனை கொண்டு வந்து ஜனாதிபதி வழங்கியுள்ள சமிக்ஞை நல்லது அல்ல. இதனால், உடனடியாக இந்த தீர்மானத்தை திருத்திக்கொள்ள வேண்டும்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நாங்கள் 2015 ஆம் ஆண்டின் தொடர்ச்சியாக கருதி நாங்கள் செயற்படுவோம். 2015 ஆம் ஆண்டு எதிரான கொள்கைகளை தோற்கடித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை நாம் பெற்றுள்ளோம். ஜனநாயகமான சிறந்த வேட்பாளரை தெரிவு செய்யும் போட்டி எமக்கு உள்ளது. நல்லாட்சி முகாமின் வேட்பாளர் யார் என்பதை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். ஜனநாயக அடிப்படைகளின் கீழ் நாம் அந்த வேட்பாளரை தெரிவு செய்வோம்.

மக்கள் குழப்பமடையக் கூடாது. குடும்பம் ஒன்று தெரிவு செய்யும் வேட்பாளரை நாங்கள் நிறுத்த மாட்டோம். குடும்பம் தெரிவு செய்த கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

நாங்கள் அவரை தோற்கடிப்போம். கோத்தபாய தற்போது நீதிமன்றத்தை புறக்கணிக்க முயற்சித்து வருகிறார். நீதிமன்றத்தை எதிர்கொள்ள முடியாத ஒருவர் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும்.

கோத்தபாய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவரது வெற்றி தடுக்க நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers