சட்ட விரோத சிங்கள குடியேற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்

முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது பூர்விக காணிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பேரில் சிங்களகுடியேற்றம் மேற்கொள்ளபட்டது தொடர்பாக வவுனியா மனித உரிமை அலுவலகத்தில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடமை புரிந்த அரச அதிபர் மற்றும் இராணுவத்தினரின் கட்டாய பணிப்பின்பேரில் பல அழிவுகளை சந்தித்து எமது பகுதிகளிலிருந்து அன்று வெளியேறியிருந்தோம்.

பின்னர் 1990 ஆம் ஆண்டு மீளகுடியமர்த்தப்பட்டு அதேஆண்டில் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். போர் முடிவுற்று 2012ஆம் ஆண்டு மீளவும் குடியமர்த்தப்பட்டோம்.

இந்நிலையில் எமது காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாம் தயாராகிய நிலையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எமது காணிகள் பறிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

குறிப்பாக ஆமையன்குளம், ஊத்தராயன்குளம், அடையாதான் குளம், கூமாவடிக்குளம், தட்டாமலை,சின்னகுளம், குஞ்சுக்குளம், நாயடிச்சமுறிப்பு போன்ற பகுதிகளில் வயல்காணி, மேட்டுகாணி என 1031 ஏக்கர் அளவிலான காணிகள், மகாவலி அபிவிருத்தி திட்டத்தினால் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது பொருளாதார நிலை மிகவும் பின்னடைவை நோக்கிசென்றுள்ளது.

இந்த காணிகள் எமது கிராம மக்களிற்கு சொந்தமான பேமிற் மற்றும் உறுதிபத்திரங்களை கொண்ட காணிகளாக அமைந்துள்ளது. சட்டவிரோதமான குறித்த காணி சுவிகரிப்பு நடவடிக்கை மூலம் இலங்கையின் நீதி, மற்றும் நியதிசட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

எனவே ஒரு மனித குலம் சந்தித்திருக்காத அத்தனை பேரழிவுகளிற்கும் முகம் கொடுத்த சமூகம் என்ற ரீதியில் அப்பாவி மக்களாகிய எங்களின் குரல்களிற்கு செவிசாய்த்து இன நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் மேலாக விரும்பும் நாம் அமைதியான முறையில் எமது காணிகளை மீளப்பெற்று கொள்வதற்கு அனைவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மெற்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 28 ஆம் திகதி எமது மாவட்ட அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதிக்கு, எமது கோரிக்கையினை அனுப்பி வைத்திருந்தோம்.

கோரிக்கை அனுப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையிலும் எமக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கபெறவில்லை. எனவே அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாகவும், சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் நேற்றையதினம் வவுனியாவிற்கு வருகை தந்து மனித உரிமை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.