சிறுபான்மையினர் ஏமாந்து விடக்கூடாது: நஸீர் அஹமட்

Report Print Navoj in சமூகம்

பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் தேர்தல் திருவிழாக்காலம் நெருங்குவதால் மக்கள் குறிப்பாக, சிறுபான்மையினர் ஏமார்ந்து விடக்கூடாதென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற தேர்தல்கள் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இடம்பெற்று வந்துள்ள நாடாளுமன்ற, ஜனாதிபதி, மாகாண சபைத்தேர்தல்கள் அனைத்திலும் பொய் வாக்குறுதிகளே அள்ளி வீசப்பட்டுள்ளன என்பதை சரித்திர ரீதியாக நாம் அனுபவத்தில் அறிந்து வைத்துள்ளோம்.

அதனடிப்படையில், நாட்டின் பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மையினரே இத்தகைய பொய் வாக்குறுதிகளால் அதிகம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அரசியல் தீர்வும் அவ்வாறு தான் ஏமாற்றப் பொதியாகவே இருந்து வந்துள்ளது.

இந்த பொய் வாக்குறுதிகளை பேரினவாத தேசியக் கட்சிகள் மட்டும் வாரியறைக்கவில்லை. அதற்குச்சமனான அளவு சிறுபான்மைக்கட்சிகளும் இத்தகைய ஏமாற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி அப்பாவி மக்களின் வாக்குகளைச் சூறையாடி இருக்கின்றன.

ஆகவே, எதிர்வரப்போகின்ற எந்தத்தேர்தலாக இருந்தாலும், அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, மாகாண சபைத்தேர்தலாகவோ அல்லது பொதுத்தேர்தலாகவோ இருக்கலாம். எதுவானாலும் வாக்காளர்களாகிய மக்கள் நின்று நிதானித்து உற்று நோக்கியவர்களாக தீர்மானமெடுக்க வேண்டும்.

இனவெறுப்பு, மதவாதம், காழ்ப்புணர்ச்சி, மொழிவாதம், பிரதேச வாதங்கள் இனி தங்குதடையின்றி உவப்புடன் கொண்டாடப்படும் ஒரு கால கட்டத்தை நாம் நெருங்குகின்றோம்.

ஆகையினால், இந்த விடயத்தில் இன, மத, பிரதேசவாதங்களை உமிழ்கின்ற கட்சிகளையும், அதன் வேட்பாளர்களையும் மக்கள் அடியோடு நிராகரித்து வெறும் கோஷங்களால் நாட்டு மக்களை உசுப்பேற்றி அழிவுக்கு வழிவகுக்கும் துஷ்டர்களை களத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

இன, மத வாதத்தைக்கையிலெடுப்போருக்கு இனி இந்நாட்டு அரசியல் களத்தில் இடமில்லை என்பதை வலியுறுத்தி நிரூபிக்க வேண்டும். ஏற்கெவே இனவாதிகளோடு கூட்டுச்சேர்ந்துள்ள நாசகாரர்களை நம்பி மீண்டுமொருமுறை நாட்டு மக்கள் மோசம் போய்விடக்கூடாது.

இன, மதவாதத்தை இன்றே தகர்த்தெறிந்து எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றுபட்ட சக்திகளாக இலங்கையர் அனைவரும் மாற வேண்டும். இன, மதவாதம் இந்நாட்டுக்கு சாபக்கேடு என்பதையும் இடித்துரைக்க வேண்டும்.

இலங்கையர் எவரும் இன, மத அடிப்படையில் பிரிந்து வாழ முடியாதென்ற உண்மை எதிர்காலத்தில் யதார்த்தமாகும் போது இன, மதவாதிகள் தலைக்குனிவைச் சந்திப்பார்கள்” என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers