கொழும்பில் இரு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழர்கள் விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த விடயத்தை அறிந்திருந்த முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொடவும், அட்மிரல் ஜயந்த பெரேராவும் அதனை மூடி மறைக்க முயற்சித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது அட்மிரல் வசந்த கரன்னகொட கடற்படை தளபதியாக பதவி வகித்து வந்த நிலையில், அவரின் பெயரில் இருந்த சிம் அட்டையானது காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தொலைபேசியில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் அடிப்படையிலேயே அட்மிரல் வசந்த கரன்னாகொடவும் இந்த சம்பவம் தொடர்பில் அறிந்திருந்தார் என கருதப்படுகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயந்த பெரேராவிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகேவிற்கு தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும், இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.