தனியார் வைத்தியசாலை காணிகளை விடுவிப்பதாக இராணுவத்தினர் உறுதி

Report Print Mohan Mohan in சமூகம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய தனியார் வைத்தியசாலை காணிகளை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் விடுவிப்பதாக இராணுவத் தரப்பினர் உறுதியளித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியில் பொன்னம்பலம் தனியார் வைத்தியசாலை ஒன்று இயங்கியுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட குறித்த தனியார் வைத்தியசாலை வளாகத்தை 2009 ஏப்ரல் மாத இறுதியில் கைப்பற்றிய 682ஆவது படையணி இராணுவத்தினர் அவ்விடத்தில் பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்து நிலை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தனியார் காணிகள் விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் தலைமையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட இராணுவத்தரப்பினர் புதுக்குடியிருப்பு 682ஆவது படையணியினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் விடுவிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் குறித்த கலந்துரையாடலின்போது கேப்பாபுலவு 59ஆவது படையணியின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பது தொடர்பில் இராணுவத்தரப்பினரிடம் இருந்து உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா இன்று தெரிவித்தார்.

கேப்பாபுலவு காணிகள் விடுப்பது தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி அரச அதிகரிகள், மக்கள் பிரதிநிதிகளும் கேப்பாபுலவுக்கு சென்று காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி பின்னர் இராணுவத் தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.