6 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன் காணாமல் போயுள்ளார்.

இவரை அவரது உறவினர்கள் தேடியும் கிடைக்காத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நேற்று இரவு வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள மாணவனின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறித்த மாணவன் நிற்பதாக, நண்பனின் சகோதரனால் மாணவனின் சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு சென்ற பெற்றோரும், உறவினர்களும் மாணவனை அழைத்து வந்ததுடன், வவுனியா பெலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், நண்பனின் வீட்டிற்கு கரம்போட் விளையாடுவதற்காகவே தான் சென்றதாக பொலிஸாரிடம் அம்மாணவன் கூறியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய ஜெயராசா கனிஸ்டன் என்ற பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயலும் மாணவனே இவ்வாறு காணமால் போயிருந்தார்.