விருந்துகளுக்கு போதை மாத்திரை விநியோகிக்கும் யுவதி உட்பட நான்கு பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விருந்துகளுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு யுவதியை 120 போதை மாத்திரைகளுடன் கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள், அவர்களை இன்று காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவெல உத்தரவிட்டுள்ளார்.

அத்திட்டிய, தெஹிவளை, போகுந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயதான விக்ரமரத்னகே தாரக மதுசங்க, 30 வயதான விக்ரமாராச்சி பதிவுன்னேலாகே சஞ்சய குமார, 24 வயதான பினித் தில்ஷான் குமார, 23 வயதான கிரும்பர ஆராச்சிகே சந்துனி மதுசானி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாடகைக்கு அமர்த்திய கார் ஒன்றில் ஹிக்கடுவை பிரதேசத்தில் நடைபெறும் விருந்துக்கு போதை மாத்திரைகளை எடுத்து வருவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் காலி பிரின் அதிகாரிகள் நேற்றிரவு பத்தேகம ரயில் கடவை பகுதியில் வைத்து இவர்களை கைது செய்தனர்.

இவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேஸ்புக் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் விருந்துகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த போதை மாத்திரைகளை எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒரு போதை மாத்திரை 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.