பெண் உட்பட 7 பாகிஸ்தான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

ஒரு பெண் உட்பட 7 பாகிஸ்தான் பிரஜைகளுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணையும் இரண்டு ஆண்களையும் கைது செய்திருந்தனர்.

இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேலும் நான்கு பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்து போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.

இந்த பெண் உட்பட 7 பேருக்கு எதிராக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அப்துல் காசிப், கான் அப்பாஸ், இக்ராம் மொஹமட், மொஹமட் நதீம், குவாதீர் ஷஹாப்சடா, ஷகீர் மொஹமட், குவாதீர் பாயிஸா அலி(பெண்) ஆகிய பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இந்த ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.