ஒட்டுசுட்டானில் காட்டுயானை தாக்கத்தை கட்டுப்படுத்த வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கை

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசங்களில் ஏற்படும் காட்டு யானை தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான யானை வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்து ஐயன்கட்டு, பேராறு, மேழிவனம், அம்பகாமம், மாங்குளம், கருப்பட்ட முறிப்பு, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றதென்றும், குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரும் பகுதிகளில் இவ்வாறு காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன், யானைகளில் பெரும் அழிவுகள் ஏற்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான யானை தாக்கங்கள் உள்ள பகுதிகளில் யானை வேலிகளை அமைத்து தருமாறு விவசாயிகளாலும், பொதுமக்களாலும் கோரிக்கைககள் முன் வைக்கப்பட்டு வருகின்ற போதும், அவற்றை அமைக்கும் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று விவசாயிகள், பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை யானை வேலிகளை அமைப்பதற்கான அனுமதிகளை வனவளத்திணைக்களம் வழங்காத நிலையில், இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையில் உள்ளன என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு யானை வேலிகள் அமைக்கப்படாமை தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது யானைகளின் தாக்கம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த பிரதேசங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன தெரிவிக்கப்பட்டுள்ளது.