இரணைதீவில் மீள்குடியேறி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளபோதும் அடிப்படை வசதிகள் இதுவரை வழங்கப்படவில்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - இரணைதீவில் மக்கள் மீள்குடியேறி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கான அடிப்படை வசதிகள், வீட்டுத்திட்டங்கள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லையென விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களும், 320 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட இரணைதீவில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 28 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தமது சொந்த நிலத்தில் குடியேறியுள்ளனர்.

மேற்படி தீவுப்பகுதியில் தற்போது 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதுடன், 320 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் இரணைதீவுப்பகுதியில் தங்கி நின்று கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீனவ சங்க நிர்வாகத்தினர் தமக்கான வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும், இதனால் எதிர்வரும் பருவமழை காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த மக்கள் மீள்குடியேறி ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை நிரந்தர வீட்டு வசதிகளோ அல்லது தற்காலிக வீட்டு வசதிகளோ ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், மலசலகூட வசதி, மருத்துவ வசதி என்பனவற்றினை ஏற்படுத்தித்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.