ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான தாக்குதல்: இராணுவம் விளக்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

இணையத்தளங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதலுக்கு இணையான தாக்குதலை நடத்த இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட சிலர் தயாராகி வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது முற்றிலும் பொய்யானது என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அத்தபத்து தமது அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,

இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. அத்துடன் இந்த செய்தியால், இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன் நாட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படும். மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படும்.

இப்படியான தகவலை வெளியிட்டுள்ள நபர் மற்றும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பாக இராணுவமும் குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

அத்துடன் இப்படியான பொய்யான செய்திகளுக்கு தேவையற்ற பிரசாரத்தை வழங்க வேண்டாம் என இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட 45 பேர் அடங்கிய குழு ஒன்று சஹ்ரான் குழுவினர் ஈஸ்டர் தினத்தில் நடத்திய தாக்குதலை போன்ற தாக்குதலை நடத்த தயாராகி வருவதாகவும் அதனை சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியும் எனவும் பொதுஜன சேவை அமைப்பின் தலைவர் றிஷாம் மஹ்ருப் என்பவர் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக சகல விபரங்களையும் தான் தனிப்பட்ட ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கியதாகவும் அவற்றை வழங்கி சுமார் ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை எனவும் அந்த நபர் கூறியிருந்தார்.

இந்த தாக்குதலை இராணுவத்தை சேர்ந்த ஒருவரே திட்டமிடுவதாகவும் அவர் தன்னுடன் தொடர்புகளை கொண்டிருந்தாகவும் மேலும் 45 பேர் இராணுவத்தில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் றிஷாம் மஹ்ருப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியை தொடர்பாகவே இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.