தற்கொலைக் குண்டுதாரியின் உடலை புதைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

Report Print Navoj in சமூகம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் புதைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் அந்த உடற்பாகங்களை ஏறாவூர்பற்று பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு இடத்திலும் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட கூடாது எனும் தீர்மானம் இன்று ஏறாவூர்பற்று பிரதேசசபை அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று பிரதேச களுவங்கேணி வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வேல் பரமதேவாவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பிரேரணையின் போது அவர் குறிப்பிட்டதாவது,

கடந்த 21.04.2019 அன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் உடற்பாகங்களை ஏறாவூர்பற்று பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு இடுகாடுகளிலும் எக்காரணம் கொண்டும் அடக்கம் செய்வது தடைசெய்யப்படல் வேண்டும்.

அவ்வாறு தடைசெய்யும் பட்சத்திலேயே இப்பிரதேச மக்களிடையே ஏற்படும் இனமுறுகலைத் தடுக்க முடியும்.

கடந்த மாதம் மட்டக்களப்பு கள்ளியங்காடு பிரதேசத்தில் இவ் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டதன் விளைவு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு நிலை எமது பிரதேசத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே சட்டங்கள் என்றும் கட்டளைகள் என்றும் இவ் உற்பாகங்களை எமது பிரதேச இடுகாடுகளில் அல்லது வேறு இடங்களில் புதைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதன் காரணமாக முன்கூட்டியே எமது சபையினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இத்தீர்மானம் சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers