திலீபனின் நினைவு நாளில் வவுனியாவிலிருந்து நடைபயணம்

Report Print Theesan in சமூகம்

தியாகதீபம் திலீபனின் நினைவுநாளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் குறித்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைபயணம், திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணையை மேற்கொள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இந் நடைப்பயணத்தில் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவ படத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், உறுப்பினர்கள், சட்டதரணி சுகாஸ், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து‌ கொண்டிருந்தனர்.

இதேவேளை, நடைபயணம் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை தாண்டி பஜார் வீதியை நெருங்கிய வேளை ஊர்வலத்தை தடுத்த பொலிசார் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளுமாறு பொலிசாரால் பணிக்கப்பட்டது. அதன்பின்னர் புதிய பேருந்து நிலையம் வரைக்கும் ஒலி பெருக்கி பாவனை இல்லாமல் நடைபயணம் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...