சர்ச்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! பிக்குவின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

Report Print Vanniyan in சமூகம்

புதிய இணைப்பு

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு புற்றுநோயால் உயிரிழந்த கொலம்பே மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடல் கொண்டுசென்றதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சென்று அவதானித்துள்ளார்.

மேலும், ஆலய சூழலில் நின்ற மக்களை சந்தித்ததுடன் தற்போதைய நிலமைகளை நேரில் கேட்டறிந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் அமைந்துள்ள குறுக்கண்த விகாரையின் விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவு கிடைக்கும் வரை நடத்த கூடாது என இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தேரரின் உடல் விகாரைக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, பழையசெம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த குறித்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்றைய தினம் வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில், அவரது உடலை விகாரைக்கு கொண்டு வரக் கூடாது என கோரி பிரதேச தமிழ் மக்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனை அடுத்தே பொலிசார் இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பாக கருத்தில் கொண்டே இந்த உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.