இன்றைய காலத்திற்கும் பொருந்தும் திலீபனின் கோரிக்கைகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

தியாக தீபம் திலீபனின் அன்றைய கோரிக்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் திலீபன் வழியில் வருகின்றோம் எனும் நடைபயணம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சைப் போராட்டமும் நடத்த தெரியும் என்று இலங்கைத் தீவிற்கும், காந்தி தேசத்திற்கும் அகிம்சையை உணர்த்தியவன் திலீபன் அண்ணா.

தமிழ் மக்களுடைய நெஞ்சிலே இன்றும் விம்மிக் கொண்டிருக்கின்ற அபிலாசைகளை சர்வதேச சமூகத்திற்கும், இலங்கையினுடைய சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் வெளிப்படுத்தும் விதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் திலீபனின் அன்றைய கோரிக்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்துகின்றது என்ற காரணத்தினால் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பயணமாக திரள இருக்கின்றோம்.

இந்த நடை பயணத்தின் வாயிலாக இந்த தேசத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் சில விடயங்களை தெளிவுப்படுத்த விரும்புகின்றோம்.

தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டும். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சரியான பதில் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட எங்களது தாயகப் பிரதேசத்தை சிங்கள இராணுவம் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தமிழ் மக்களது இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். இதுபோன்ற மக்களது அபிலாசைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஜனநாயக அகிம்சைப் போராட்டத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய அபிலாசைகள் நிறைவேறும் வரை எங்களுடைய அரசியல் பயணம் அகிம்சை வழியில் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.