தாய்மார்களின் கண்ணீரால் நனைந்த யாழ். நாகர்கோவில்

Report Print Rakesh in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

வித்தியாலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் ஞாபகார்த்த நினைவுத் தூபியடியில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இறைவணக்கம், மெளன அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்ட நண்பகல் 12 மணியளவில் நினைவுத் தூபியடிக்கு முன்பாக ஈகச் சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த துயரச் சம்பவம் இடம்பெற்றபோது பாடசாலையின் அதிபராக இருந்த சி.மகேந்திரம் முதலாவது ஈகச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் ஈகச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது பல தாய்மார்கள் தமது பிள்ளைகளை இழந்த சோகத்தைச் சொல்லி கடும் வேதனையில் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நினைவேந்த நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலப்பகுதியில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப் படையின் புக்காரா விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த 21 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.