புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரின் செயல் தவறானது!

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தாக்குதல் மெற்கொண்டமை தவறானது என புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் தவிசாளரினால் தாக்கப்பட்ட நபரையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் தம்மை கேள்வி எழுப்பியதாகவும், இவ்விடயம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கியமை தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதுடன், பல்வேறு விமர்சனங்களும் தவிசாளர் பிறேமகாந் மீது முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வின் போது பேசப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த குடும்பம் ஏற்கனவே யுத்தம் மற்றும் ஏனைய செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச சபை தவிசாளர் இவ்வாறு நடந்து கொண்டமை கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச சபைகளிற்கென வழங்கப்பட்ட கொஞ்ச அதிகாரங்களைக் கொண்டு இவ்வாறு மக்களை பாதிப்படையச் செய்யும் வகையில் நடந்துக் கொள்வது பொருத்தமற்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த காணியானது பிரதேச சபைக்கு பிரதேச செயலகத்தினாலோ, வேறு தரப்பினராலோ வழங்கப்படாத நிலையில், தவிசாளர் குறித்த காணியில் நிர்வாக ரீதியில் செயற்படாது, நேரடியாக இவ்வாறு நடந்துகொண்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.