பரீட்சைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள்

Report Print Navoj in சமூகம்
190Shares

கல்வி வலயத்தால் 3ஆம் தவணை ஆரம்பத்தில் நடத்தப்படும் பண்புசார் விருத்திக்கு முரணான பரீட்சைகளால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதோடு, அப்பட்டமாக சிறுவர் உரிமைகளை மீறும் வகையில் இப்பரீட்சைகள் அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலை மட்டத்தில் வினைத்திறனாக இரண்டாம் தவணைப் பரீட்சை நிறைவு பெற்று மாணவர்களின் அடைவுமட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ள வேளை பாடசாலை 3ஆம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு குழப்ப நிலையை ஏற்படுத்தும் நிலையில் வலயத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் அமைந்துள்ளன.

கடந்த இரண்டாம் தவணையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் மன உழைச்சலுக்கு மத்தியில் சிறப்பான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையில் மட்டக்களப்பு கல்வி வலயம் பரீட்சைப் பகுப்பாய்வுகளை நடத்தியமையை சங்கம் வன்மையாகக் கண்டித்திருந்தது.

ஆசிரியர்கள் பல சிரமத்தின் மத்தியில் 03ஆம் தவணை பாடத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியுள்ள வேளையில் பண்புசார் விருத்திக்கு முரணாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞான பரீட்சை வினாத்தாள்கள் இருந்ததாகவும் மேலும் மாணவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு முரணாக பரீட்சையை மையமாகக் கொண்ட செயற்பாடுகளால் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளது.

தரம் 09, தரம் 10 மாணவர்களின் அடைவு மட்டத்துக்கான பரீட்சைகளை வலயம் ஒழுங்கு செய்துள்ளதாகவும், இதனால் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்புசார் விருத்திக்கு முரணாக தயாரிக்கப்பட்டுள்ள பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளமையால் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு முடியாமல் திண்டாடுகிறார்கள்.

மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அதிகாரிகளின் தூர நோக்கற்ற வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தரமான கல்விக்கான செயற்பாடுகளும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் சீர் குலைந்துள்ளதாகவும் மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.