ஹட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது இன்று கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது இருவர் காயங்களுக்குள்ளானதுடன், அதில் ஒருவர் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் குறித்த யாசகரை பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்ற போது, அவர் ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸார் யாசகரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் நகரில் சில இளைஞர்கள் குறித்த யாசகரை கேலிக்குட்படுத்தும் வகையில் நடத்துவதால், அவ்வாறு நடத்தும் இளைஞர்களை குறித்த யாசகர் கற்களால் தாக்குவாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குறித்த யாசகரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
