நிர்வாகத்திற்கு எதிராக சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

மத்திய மாகாணம - ஸ்டொக்கம் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தோட்டங்கள் காடு ஆகி காட்சியளிக்கின்றது. தொழிற்சாலை ஒழுங்கான முறையில் இயங்குவதில்லை. சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகத்தினால் கவனிக்கப்படாத பல்வேறு விடயங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

அதேவேளை தோட்டத்தின் தேயிலை மலைகள் காடாகப்பட்டிருப்பதால் தோட்ட நிர்வாகம் பணிக்கும் தேயிலை இறாத்தலை பெறமுடியாது சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வருமான ரீதியில் தாம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுடைய மருத்துவம், இலவச வாகன போக்குவரத்து, கர்ப்பிணி தாய்தார்களுக்கான சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவிகள் போன்றவற்றை இம்மக்களுக்கு வழங்காது புறக்கணித்து வருவதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

சுகாதாரம் மற்றும் அடிப்படை பிரச்சினைக்கு ஆளாகி உள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்திடம் இது குறித்து வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது செயல்பட்டு வருவதால் இவைகளை உடனடியாக தோட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் எனவும், தொழில் ரீதியில் முன்னேற்றமடைய ஸ்டொக்கம் தோட்ட மலைகளை சுத்தம் செய்து அட்டைக்கடி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையில் இருந்து தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இதில் அந்த தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 100இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.