தரிப்பிடம் இல்லாமல் நின்ற முச்சக்கரவண்டியால் குழப்பம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - இலுப்பையடி பகுதியில் தரிப்பிடம் இல்லாமல் பயணிகள் சேவையை முன்னெடுத்த முச்சக்கர வண்டியால் நேற்றிரவு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யபட்டு, ஒதுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள் மாத்திரம் தரித்து நின்று பொதுமக்களிற்கான சேவையை மேற்கொண்டு வந்தன.

இந்நிலையில் குறித்த தரிப்பிடத்தில் சங்கத்தால் பதியப்படாத முச்சக்கரவண்டி ஒன்று நேற்றையதினம் தரித்து நின்று சேவையினை மேற்கொண்டிருந்தது.

இதனால் குறித்த தரிப்பிடம் ஒதுக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் அவருடன் முரண்பட்டதுடன் இப்பகுதியில் நின்று சேவையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர்.

இதனால் சற்று நேரம் அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. பின்னர் குறித்த சாரதி முச்சக்கரவண்டியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். ஏனைய சாரதிகளும் பொலிஸ் நிலையம் சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பும் கடுமையாக முரண்பட்ட நிலையில் தரிப்பிடம் இல்லாமல் சேவையை மேற்கொண்ட குறித்த சாரதி மற்றும் ஏனைய சாரதிகள் என மூன்று பேரும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், இன்றையதினம் நீதி மன்றில் ஆயர்படுத்தபட்ட போது குற்றப்பணம் செலுத்துமாறு கூறப்பட்டதையடுத்து குறித்த நபர்கள் குற்றப்பணம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளனர்.