வவுனியாவில் வயல் நிலம் கோரி போராட்டம் நடத்திய மக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சோபாலபுளியங்குளம் மக்கள் தமக்கு வயற்காணி வேண்டும் என்று கோரி இன்று போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சோபாலபுளியங்குளம் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வந்த மக்கள் தமது கிராமத்துக்கு முன்பகுதியில் இருக்கும் 40 அரச காணியை தாம் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்துவதற்காக பல வருடங்களாக போராடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தமது போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குறித்த அரச காணியை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்காக இன்று உழவு இயந்திரத்தின் மூலம் வரம்பு அமைத்து காணியை கிராம மக்கள் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த காணி முஸ்லிம் நபர்களுடையது என உரிமைகோரி வந்த நபர்கள் காணி அபிவிருத்தி வேலையை உடனடியாக நிறுத்துமாறு கூறி கிராம மக்களுடன் முரண்பட்டு சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்தும் கிராமசேவையாளர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து காணி அபிவிருத்தி வேலைகளை நிறுத்துமாறு கூறியதைத் தொடர்ந்து கிராம மக்களுக்கும், கிராமசேவையாளருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சம்பவ இடத்தில் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமசேவையாளர் ஒரு வார கால அவகாசத்துக்குள் குறித்த காணிப்பிரச்சினை தொடர்பான தீர்வினை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து காணி அபிவிருத்தி வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.