போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன. அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை உருவாக்கிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பினை கௌரவிக்கும் முகமாக கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற சந்திப்பில் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஆளுநர் மாணவனை பாராட்டி கௌரவித்ததோடு பாராட்டு பத்திரத்தினையும் வழங்கினார்.
மேலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் வருட கல்வியினை தற்போது தொடர்வதனை கருத்தில் கொண்டு மாணவனின் பட்டப்படிப்பின் பின் கண்டுபிடிப்பினை விரிவாக்கும் பொருட்டு வடமாகாண ஆளுநரின் பணிப்புரையில் மாணவனுக்கு வெளிநாட்டில் மேற்படிப்பினை தொடர்வதற்காக புலமைப்பரிசில் மற்றும் குறித்த ஆராய்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நிதிஉதவியும் வழங்கப்படவுள்ளது.
வடமாகாணத்தில் மாற்றுவலுவுள்ளோருக்கான தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 25 உணர்திறன் கைகள் மாணவனின் மேற்பார்வையில் உருவாக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
இதன்போது வடமாகாண மக்களின் சார்பாகவும் ஆளுநர் மாணவனுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.