கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Report Print Varunan in சமூகம்

கல்முனைகுடி பகுதியில் 7 கிலோகிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பெயரில் கைதானவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மோட்டார்சைக்கிளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடு ஒன்று சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இதன்போது கேரளா கஞ்சாவை தராசில் வைத்து நிறுத்துக் கொண்டிருந்த இரு பெண்கள் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 7 கிலோகிராம் கஞ்சா குறித்து சந்தேகநபரான பெண்ணொருவரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் பொலிஸாரின் அசமந்தம் பாராபட்சம் குறித்து நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்த வழக்கு தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்த கல்முனை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் பொலிஸ் சார்ஜன்ட் ரவூப் ஆகியோரிடம் விளக்கம் ஒன்றினை பெற ஆவண செய்ய வேண்டும் என நீதிவானிடம் விண்ணப்பம் ஒன்றினை கோரி நின்றனர்.

எனினும் சகல சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி வரை மீண்டும் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.