பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில்

Report Print Varunan in சமூகம்

பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வழக்கு தொடர்பில் நீதிவான் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் தவணையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, சந்தேகநபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக எடுத்து கூறி பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

மேலும் சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவியை கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேகநபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) அழைத்து தனக்கு ஒரு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேகநபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார். இதன்போதே சந்தேகநபர், மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள நிலையில் சத்தம் கேட்டு அயலவர்கள் சந்தேகநபரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அம்மாணவியை கைவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் தலைமறைவான சந்தேகநபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.