தவிசாளருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் தலைமையில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மதவுவைத்தகுளம் பகுதி மக்களுக்கு நான் பல வருடகாலமாக நீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றேன். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் என் மீது பொய்யான காரணங்களை முன்வைத்து என்னை நீர்விநியோக பணியிலிருந்து நீக்கி வேறொரு நபருக்கு நீர் விநியோக பணியினை வழங்கியுள்ளார். தவிசாளரின் தன்னிச்சையான முடிவுக்கு தீர்வு வேண்டுமென போராட்டக்காரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தெற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போராட்டம்! எனக்கு நீதி வேண்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையினை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட போது,

கடந்த ஐந்து நாட்களாக பொதுமக்களுக்கு நீரினை விநியோகம் செய்யாது நீர் விநியோக கட்டிடத்தின் சாவியினை குறித்த நபர் வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள நீர்வழங்கல் திட்டம் எமது பிரதேச சபைக்கு சொந்தமானது. எனவே, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் சாவியினை பெற்று பிறிதொரு நபரிடம் வழங்கி மக்களுக்கான நீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.