நவராத்திரி விழா தினங்களில் கருத்தரங்கு இடைநிறுத்தம்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

நவராத்திரி விழாக் காலத்தில் கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களுக்காக நடாத்தப்படவிருந்த கருத்தரங்கு உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 2(1) இலிருந்து தரம் 1இற்கு பதவியுயர்வு பெறுவதற்கான செயலமர்வு எதிர்வரும் 5,6,7ஆம் திகதிகளில் நடத்த கல்முனை வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் திட்டமிட்டு அழைப்புக் கடிதங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பியிருந்தது.

இந்து ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் முக்கிய சமயச்சடங்கில் பங்குபற்றவேண்டியிருப்பதால் இதனை ஒத்திவைக்க உதவுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜாவிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர்.

தமிழ் மக்கள் குறிப்பாக இந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வித் தெய்வமாம் வாணியை துதித்து வணங்கும் இக்காலப்பகுதியில் இக்கருத்தரங்கை நடத்துவது முறையல்ல.

குறித்த 3 தினங்களும் அவர்கள் பூரணமாக பாடசாலைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்தி பல சமயம்சார் கலை நிகழ்ச்சிகளை நடத்தி பலவித நைவேத்தியம் படைத்து பெரு விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.

அத்தகைய நவராத்திரி விழாக் காலப் பகுதியில் கருத்தரங்கு நடத்துவதென்பது இந்து மாணவர் ஆசிரியர்களின் மத சுதந்திரத்தை மறுப்பதாக அமையும்.

எனவே, அதனை கருத்திற்கொண்டு நவராத்திரி விழாவினை ஒத்திவைக்குமாறு ஆசிரியர் பிரதிநிதி வி.ரி.சகாதேவராஜா கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலிடம் தொடர்புகொண்டு இவ்வேண்டுகோளை விடுத்தார்.

பணிப்பாளர் ஜலீல் உடனடியாக அதனை இடைநிறுத்தம் செய்து பிறிதொரு தினத்தில் நடத்த உத்தரவிடுவதாக உறுதியளித்தார்.

இச்செய்தி இந்து ஆசிரியர்கள் மத்தியில் பலத்த மகிழ்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பணிப்பாளருக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர்.