நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Kumar in சமூகம்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 24வது அமர்வு மாநகர பதில் முதல்வரும், பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வமர்வில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கான அங்கீகாரங்களை பெறும் வகையிலான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சபை அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதனால் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டத்திற்கு முரணாக வகையில் விகாரை ஒன்றினை அமைத்தமை மற்றும் நீதி மன்றத் தீர்ப்பையும் மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரை ஓரமான மரணித்த விகாராதிபதியின் உடலை தகனம் செய்தமைக்கான கண்டனத்தையும், அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் துரைசிங்கம் மதனால் கொண்டு வரப்படுகின்ற 'கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பொலன்னறுவை புகையிரத நிலையம் வரை செயற்படுத்தப்படுகின்ற ' புலதிசி' அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையை மட்டக்களப்பு புகையிரத நிலையம் வரை நீடித்து செயற்படுத்தல்' தொடர்பான பிரேரணையும் சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.