யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கையூட்டல் பெற்ற விவகாரம்! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனின் விளக்கமறியலை வரும் 15ஆம் திகதிவரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என அந்த கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் கடந்த 20ஆம் திகதி நண்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் அன்றைய தினமே மாலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான தொடர் விசாரணைகளை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கவும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த நிலையில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் அதிபர் சதா நிமலன் நேற்று முற்படுத்தப்பட்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்றுக்கு உரைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை தொடர்வதற்கு அவரது விளக்கமறியலை நீடிக்க கோரி விண்ணப்பம் செய்தது.

வழக்கை விசாரித்த நீதிவான், அதிபர் சதா நிமலனின் விளக்கமறியலை வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.